Labels

Thursday, June 25, 2015

50. தந்தையர் தினம் ! வாழ்க்கை அனுபவங்கள் பலருக்கு உதவட்டுமே.


1905ல் என் தந்தையாரின் பாட்டனார் குன்றக்குடியில் யஜூர் வேத பாடசாலை நிறுவி நடத்தி வந்தார்கள். பர்மாவிலும் மலாயாவிலும் லேவாதேவியும் மர வியாபரமும் நடத்தி வந்தார்கள். என் பாட்டனார் என் தகப்பனாருக்கு மூன்று வயதிருக்கும்போதே இறந்து விட்டார்களாம், அவர்களின் பாட்டனார்தான் அவர்களை வளர்த்தது. 14 வயதில் பர்மாவிற்கு கொண்டு விற்கப் போனார்களாம். சொந்த லேவாதேவிக் கடையில் வேலை பழகுவதற்கு. அதாவது முதலைக் கொண்டு போய் வியாபாரம் செய்வது. ( இன்னொரு சமூகத்தில்சாமர்த்தியம்பன்னப் போயிருக்காங்க என்று சொல்லுவார்கள். அதாவது மலாயாவிற்கு சென்று அங்கு கடன் வாங்கி தொழில் செய்து, கடனையும் அடைத்து லாபத்துடன் திரும்பி வருவது. Break even னுக்கு மேலே! மூன்று வருடங்களில். Very enterprising !  18 வயதிலிருந்து 33 வயது வரை ராதா அண் கோ, கமலா அண் கோ, சிவா அண் கோ என்று ஷேர் கம்பனிகளும் ( திரு பழ. கருப்பையா அவர்களின் தந்தையார் பாசின் பழநியப்ப செட்டியார் அவர்கள் பள்ளித் தோழர், ஒரு பார்ட்னர்!) அம்பாள் அண் கோ, பெட்றோ பாட்டரி டிப்போ என்று ஜெனெரல் மெர்ச்சண்ட்ஸ் ஷாப்பிகளும் நடத்தி வந்தார்கள்.

1945ல் என் தந்தையவர்களுக்கு, 33 வயதில், ஷேர் மார்க்கட்டில் 1 லட்ச ரூபாய்க்கு மேல் நட்டம் வந்ததாம்.
முன்னோர்கள் வைத்திருந்த சொத்தை விற்று அதை சரி செய்திருக்கலாம். கையில் இருந்த ஷேர்களை விற்று சுமார்லட்ச ரூபாயை அடைத்து விட்டு, மீதமிருந்த சிறிய தொகையை மலாயாவிற்குச் சென்று சம்பாதித்து அனுப்புவேன் என்று நண்பர்களிடம் கூறி 1948ல் மலாயாவிற்குப் புறப்பிட்டுச் சென்றதாக என் தகப்பனார் என்னிடம் கூறியுள்ளார்கள், இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பிறகு, நான்கு ஆண்டுகள் ஜப்பானியர்களின் சித்திரவதைக்குப்பின் மலாயா பிரிடிஷாரின் கைக்குத் திரும்ப வந்து விட்டது. அங்கு எல்லாம் ஜப்பான் நோட்டுக்களாகப் போனதால் ரொக்கம் கையில் இல்லை. பிரிடிஷ் கரன்சி மறைத்து வைத்திருந்தவர்களிடம் மட்டுமே பணம் இருந்தது, ஆனால் 2 வீடுகளும் தென்னந்தோப்பும் இருந்தன. எங்கள் பங்காளிகளில் ஒருவர் தானாகவே முன் வந்து உதவி செய்கிறேன் என்று கூறியபோதும் அவர்களிடம் ஒரு வீட்டை அடமானம் வைத்தும் மற்றவற்றை விற்றும் லேவாதேவி தொழிலை ஆரம்பித்தார்களாம். தன் திறமையையும் உண்மையையும் முதலில் மதித்தவர்கள் என்பதால் ராமசாமி பெரியப்பச்சி மீது கடைசி வரை அவ்வளவு மரியாதை வைத்திருந்தார்கள். மலேசியாவில் எங்கள் கடை 1928 நவம்பரில் எங்கள் பாட்டைய்யா மெ.நாக.மெய்யப்ப செட்டியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. 20 வருடங்கள் ஏஜெண்டுகளளாலேயே நடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அவ்வளவு நம்பிக்கையான காலம் அது! 1948ல் தான்  என் தகப்பானாரவர்கள் பத்து பகாட்டிற்குச் (வத்துப்பகார்) சென்றிருக்கிறார்கள். நான் 11 வயதில் 1959ல் பத்து பகாட்டிற்குச் சென்றேன்.

உழைப்பவர்களைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யத் தயங்க மாட்டார்கள்.”அப்பறம்என்கிற பேச்சே கிடையாது. உடனே சட்டையை மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்கள்

சில உறவினர்களிடம் கடன் கொடுக்கும்போது எழுதி வாங்குவார்கள். எனக்குத் தெரியும், இருக்கும் சூழ்நிலையில் அவர்கள் திருப்பித் தரப் போவதில்ல என்று. “மனுஷங்காரியம் நிச்சியமில்லைப்பா, ஏற்றம் இறக்கம் இருக்கத்தான் செய்யும். நல்லா வரும். அப்ப தந்திருவாகஎன்பார்கள் அப்படி 10, 15 வருடம் சென்று பணம் திரும்பி வந்ததும் உண்டு.

என் தாயாரின் பணத்தைத் தனிக்கடையாக வைத்து சம்பாதித்துத் தந்தார்கள். பிற்பாடு என் உறவினர்கள் என் தந்தையிடம் நீங்க எங்க பணத்தையும் பெருக்கித்தரவேண்டுமென்று கேட்டு அவர்கள் செய்து கொடுத்தார்கள்.”தாயைக் கொல்லாத தொழில் வட்டித் தொழில் என்பார்கள.

ஷேர் டிரேடிங், புத்தகங்கள் வாசிப்பது, வரைவது, சங்கீதம் கேட்பது, மொழிகள் கற்றுக் கொள்வது அவர்களது பொழுது போக்காகும். 96 வயதில் இயற்கை எய்தும் வரை நன்கு செயல் பட்டார்கள். 93 வயதில் மலையாளம் எழுதக் கற்றுக் கொண்டார்கள். தமிழ், ஆங்கிலம் தவிர உருது, ஹிந்தி,மலையாளம், ஜாவி மலாயும் எழுதத் தெரியும். இறப்பதற்கு 13 நாட்கள் முன்பு பட்ஜெட் டிரேடிங், ஹாஸ்பிட்டலில் இருந்தவாரே!
  
1981ல் பர்மா காலனிக்கு எதிர்புரம் கற்பக விநாயகர் நகர் அமைத்து கோவிலும் கட்டி அவார்கள் வாழ்நாள் முழுதும் டிரஸ்டியாக இருந்து வந்தார்கள். 9 பார்ட்னர்கள். நிதி, படிப்பு, ஆள்பலம் கொண்ட அனைவரையும் அரவணைத்து, சுமார் 32 ஏக்கர், 346 பிளாட்டுகளை மூன்று வருடங்களில் விற்று முடித்தார்கள். 9 பார்ட்னர்கள் ! !

காரைக்குடி, சேலம், அரூர் ஆகிய நகரங்களில் தங்க நகை அடகு, மறு அடகு கடைகளை நடத்தி வந்தார்கள். காரைக்குடியில் சிமிண்ட் ஏஜென்சியும் நடத்தி வந்தார்கள். பிறகு வைர வியாபாரத்தில் நேரடிக் கொள்முதல் செய்து நடத்தினார்கள்.

மற்றவர்களுக்கு தொந்தரவில்லாமல் இருக்க தம் உடல் நலத்தைப் பேண வேண்டும் என நினைப்பார்கள். பண லாப நட்டங்களுக்காக கவலைப் பட்டதே கிடையாது.

எளிமையான வசதிகள் நிறைந்த வாழ்க்கையை விரும்புவார்கள். எங்களையும் அப்படியே பழக்கி விட்டார்கள்.

ஆலோசனை கேட்பவர்களுக்கு, தனக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அவர்களுக்கு நல்லதையே  கூறுவார்கள். அவர்களின் இறுதிச் சடங்கின்போது, கட்டத்தளத்தில் கூடியிருந்த கூட்டமே. அதற்குச் சாட்சி.

அப்பச்சி, ஐய்யா, மாதிரி இனிமே எங்களுக்கு உண்மையாக யோசனை பாசனை சொல்ல ஆளில்ல அண்ணே!” அம்மன் சன்னதி கடைகளிலிருந்து வந்த அத்தனை பேரும் சொன்னார்கள். எங்கள் பெரியாயா பேரன் கும்பாபிஷேகதிற்காக காப்புக் கட்டியிருந்ததை அவிழ்த்து வைத்து விட்டு வந்து விட்டார்!

பிரச்சினைகளை வரிசைப்படுத்திவர வர நகளுவோம்என்பார்கள். ”அப்பச்சி! இன்கம் டாக்ஸ்ல கணக்க இந்த வருஷம் மலாய்ல குடுக்கனும்னு சொல்றாக. நீங்க இந்தியாவில இருக்கீங்க. ஆடிட்டருக்கு மலாய் தெரியல. அவரும் யார்ட்டயோ குடுத்து வாங்குவார் போல. அப்புறம் இண்டர்வியூ வேற போகணும். அவன் என்ன கேட்பானோ?” என்று நானும் சரமாரியாக ஃபோனில் பேச, அப்பச்சி சொன்ன பதில்வரவர நகளுவம்”. பின்னொருநாளில் நான் அதன் அர்த்தம் என்னவென்று கேட்டேன். தேவர்கள் சிவபெருமானிடம் வந்துஇந்திர லோகமே பற்றி எரிகிறது இங்கும் வரப் போகுது என்ன செய்வதுஎன்று கேட்டார்களாம் அதற்கு சிவ பெருமான் சொன்ன பதில்தான்வரவர நகளுவம்”  பதட்டப்படாதே, ஒன்றொன்றாகக் கடந்து போவோம் என்று அர்த்தமாம்.

தன்னம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு, வயதான காலத்திலும் போரடிக்காமல் பொழுது போக்குவது எப்படி என்று அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டோம்.

ஹாஸ்யத்திலும் குறைந்தவரல்ல:
ஒரு முறை மத்தியானம் ஸ்கூல் விட்டு வந்து கதவைத் திறந்தபோது, இடித்துக் கொண்டு விட்டேன். பசி வேறையா! கதவை ஓங்கி ஒரு உதை விட்டேன். படுத்துக் கொண்டிருந்த அப்பச்சிடேய் என்னடா அதுஎன்றார்கள். “ஒன்னுமில்ல கதவு இடிச்சுருச்சு” ”என்ன கதவு இடிச்சுருச்சுருச்சா? அறிவு கெட்ட கதவு என்று சொல்லி விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டார்கள்
வடையைக் கடித்துத்திங்காதே. பிச்சுச் சாப்டம்னா, யாரும் வந்தா அவங்களுக்கு ஒரு பகுதியக் கொடுக்கலாம். நல்ல பிரண்ட்ஷிப் கிடைக்கலாம்.யார் கண்டா நல்ல பிஸினஸ் பார்ட்னரே கிடைக்கலாம!” ஓ அப்ப பாசின் பழ. இப்படித்தானோ என்று நினைத்துக் கொண்டேன்.