40. ஆயுர்வேதம் ஆயுசு கூட்டும்
தான் பிறந்து வளர்ந்த ஊரான கொல்லத்தில் இரண்டு வாரங்கள் தங்குவோம் என்று கொஞ்சம்கூட என் மனைவி எதிர்பார்க்கவில்லை! எல்லாம் அவள் அக்காவும் அவா புருஷரும் ஆயுர்வேதத்தில் நம்பிக்கை வைத்து எண்ணெய் போடச் சென்று வந்து குணமான புண்ணியத்தில்தான்.
சீனியர் சிட்டிசன் டிக்கெட்டை தட்கலில் புக் செய்து கொல்லம் சென்று சேர்ந்தோம்.
வைத்தியர் / டாக்டர் கொஞ்சம் நம்ம பாரதிராஜா மாதிரி இருந்தார். உன்னிகிருஷ்ணன்
s/o கேசவன் பிள்ளை. BAMS, PhD. பரம்பரை
வைத்தியர் பட்டமும் வாங்கியவர். பொளந்து கட்டுகிறார் ஆங்கிலத்தில், மலையாளத்திலும்தான். நமக்கும் வசதி, ‘பாரியாளுக்கு’ம் ‘சௌகரியம்’.
“நிங்களுக்கு வாத-பித்த தேகமானும். அதே அனுசரித்து எண்ணை இடணம். வலத்தே தோளிக்கு மஸாஜ் செய்யணம். ஏழு திவசம் எண்ணெய் இடணம். ஒரு திவசம் ரெஸ்ட்டானும் purgative தரணம். பின்னே மூனு திவசம் கிழி (முடிச்சு) இடணம். சுக சிகிச்சைதன்னே. நோ ப்ராப்ளம்.” என்றார்.
வேர்க்கக்கூடாது ஆதலால் மழைக்காலத்தில்தான் எண்ணெய் இட வேண்டுமாம். எண்ணை தேய்த்துக் குளித்த உடன் தூங்கக் கூடாது
அடிப்படை எண்ணைகள் நல்லெண்ணை, தேங்காய் எண்ணை, ஆமணக்கு எண்ணை, வேப்பெண்ணை, கடுகு எண்ணை, வாதாம் எண்ணை, ஷீரபலா, தந்வந்த்ரம், முக்கூட்டு போன்றவை ஆகும்.
இலைகள், கருநொச்சி, ஆடாதொடை, ஆமணக்கு, எருக்கு, மஞ்சனத்தி, வேப்பிலை, புளி இலை, முடக்கத்தான், யூகாலிப்டஸ், ஐந்திலை நொச்சி, முருங்கை, நார்த்தை, சதகுப்பை போன்றவை ஆகும்.
தவிர பூண்டு, தேங்காய், இஞ்சி, சீரகம், அரிசி, பெருங்காயம் போன்றவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
அவரவர் உடம்புக்குத்
தகுந்தவாறு எவைஎவை, எந்த அளவில், எப்படி உபயோகப்படுத்துவது என்பது தீர்மானிக்கப்
படுகிறது. வாத உடம்பிற்கு நல்லெண்ணையும் பித்த
உடம்பிற்கு தேங்காய் எண்ணையும் கப உடம்பிற்கு கடுகு எண்ணையும் அடிப்படை எண்ணெய்யாக
உபயோகப்படுத்துவதாகச் சொல்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் தேய்ப்பவருக்கு டெக்னீக்
தெரிந்திருக்க வேண்டும்‼
தங்குவதற்கும்
எண்ணெய் போடுவதற்கும் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் 1200 ரூபாய் ஆகலாம்.